ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மாநிலங்களுக்கு வழங்கக்கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு ரூ.1.51 லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலுவைத்தொகையை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துவந்து நிலையில், இதுகுறித்து மாநிலங்களையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய அரசு, “மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதி இல்லை” எனத் தெரிவித்தது.
இந்நிலையில், மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.