ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான பணத்தை எலிகள் கொறித்துத் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ளது லாய்புலி கிராமம். இந்த கிராமத்தில் எஸ்.பி.ஐ.க்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வந்தது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதன்படி, கடந்த மே 19ஆம் தேதி அந்த நிறுவனம் ரூ.29 லட்சம் மதிப்பிலான ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வைத்துவிட்டுச் சென்றது. அதன்பிறகு ஒருநாள் மட்டுமே செயல்பட்ட அந்த எந்திரம், மே 20 முதல் ஜூன் 11 வரை செயல்படவே இல்லை.
நீண்ட நாட்களாக செயல்படாத நிலையில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை, அதிகாரிகள் திறந்து பார்க்க சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த எந்திரத்தில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரூ.17 லட்சம் போக மீதமிருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான பணத்தை எலி கொறித்து தின்றுள்ளது. ரூபாய் நோட்டுகள் உருக்குலைந்த நிலையில் சிதறிக்கிடக்கும் இந்த எந்திரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் டிஜிட்டல் இந்தியா இதுதானா? என்ற கேள்வியை எழுப்பிவரும் நிலையில், பணமதிப்பு இழப்பின் இரண்டாம் பாகம் இது எனவும் சிலர் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.