ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்தும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாத நிலைதான் மும்பையில் நீடிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்.
ஆதாருடன் இணைக்காத ரேஷன் அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதற்குத் தடைவிதித்தது. அத்தியாவசியப் பொருட்களை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்திவைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ஆதாரோடு ரேஷன் அட்டைகளை இணைக்கும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அதன்படி, மும்பையில் உள்ள ரேஷன் கடைகளில் ஆதாரோடு ரேஷன் அட்டைகளை இணைக்கும் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால், பல லட்சம் மக்களின் ரேஷன் அட்டைகளை ஆதாரோடு இணைக்க முடிவதில்லை. அதிலும் குறிப்பாக யார்யாரெல்லாம் தங்கள் ரேஷன் அட்டைகளை ஆதாரோடு இணைத்தார்களோ அவர்களுக்கே இந்த நிலைதான் நீடிக்கிறது.
‘ஏப்ரல் 2018 வரையுள்ள தகவல்களின் படி மேற்கூறிய காரணங்களால் மும்பையைச் சேர்ந்த 21.82 லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுவழியை ஏற்படுத்த ஆளும் பாஜக அரசு முன்வரவில்லை. பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ள நிர்வாகிகளே இந்தப் பிரச்சனை குறித்து முறையிட்டும் பயனில்லை. அரசு துரிதமாக செயல்பட்டால், 22 லட்சம் மும்பைவாசிகளின் பட்டினியைப் போக்கலாம்’ என்கிறார் சஞ்சய் நிருபம்.