உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றைத் தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ எனக் கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். எனத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் துணைத் தலைவருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பாகிஸ்தானில் ஒரு 16 வயது இளைஞனாக எவ்வளவு துன்புறுத்தப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும்; என்னுடைய மதம், நிறம், நாடு, கலாச்சாரம் எல்லாவற்றிற்காகவும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், லட்சுமண் சிவராமகிருஷ்ணனின் கருத்துக்குப் பதிலளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், “விளையாட்டு என்பது நம்மில் இருக்கும் நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வர வேண்டும்; தீயவற்றை அல்ல. பாகிஸ்தானில் ரசிகர்கள் நம் வீரர்களை கேலி செய்திருக்கலாம்; ஆனால் அதே சமயம் நம் வீரர்களைக் கொண்டாடியும் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த போட்டியில் ஒட்டுமொத்த மைதானமும் உங்கள் தமிழ்நாட்டு வீரர் பாலாஜியின் பெயரை அன்புடன் கோஷமிட்டதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது நானும் மைதானத்தில்தான் இருந்தேன்.
நீங்கள் சென்னையில் இருந்து வருகிறீர்கள். சென்னையில் 1999 ஆம் ஆண்டு நடந்த மறக்க முடியாத டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நான் அடிக்கடி சொல்வதுபோல் அரசியலும், மதமும் சமூக வலைத்தளங்களும் வெறுப்பை விதைக்கும்போது, விளையாட்டின் மூலம் நல்லிணக்கத்திற்கான பாலங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.