பேனாவை வைத்துக்கொள்வது யார் என்ற சண்டையில் 12 வயது சிறுமி தனது தோழியை கொன்றுள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், சக்சு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் மாணவி ஒருவர் தனது தோழிக்கு தேர்வு எழுத பேனா கொடுத்து உதவியுள்ளார். பின்னர் தேர்வு முடிந்து அந்த சிறுமி பேனாவை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து, பேனாவை கொடுத்த மாணவி, அதனை திரும்ப கேட்பதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பேனாவை யார் வைத்து கொள்வது என்பதில் இரண்டு சிறுமிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், பேனாவை எடுத்துச்சென்ற சிறுமி அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, பேனா கொடுத்த சிறுமியை தாக்கியுள்ளார். இதனால் சுருண்டு விழுந்த அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், இதனை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். கொலை செய்த சிறுமியின் பெற்றோர், கொலையை மறைக்க, உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வேறு இடத்தில் போட்டுள்ளனர். சிறுமியின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு நடந்த விசாரணையின் முடிவில், சிறுமி கொலை செய்ததும், அதனை மறைக்க பெற்றோர் உதவியதும் தெரிய வந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் கொலை செய்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.