ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் ஜோத்புரா கிராமத்தில் உள்ள ஆழ்துளை குழாய் கிணற்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அப்போது இது தொடர்பாகத் தேசிய பேரிடர் மீட்புப்படையின உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், “குழந்தையை மீட்க 31 அடி இணை குழி தோண்டப்பட்டுள்ளது. கிடைமட்டமாக 17 அடி குழி எடுக்க வேண்டும். இதுவரை 12 அடியை நெருங்கிவிட்டோம். இன்னும் 5 அடி பாக்கி உள்ளது. அதன் பிறகு குழந்தைக்குப் பாலும் பிஸ்கட்டும் கொடுக்கப்படும். இன்னும் 2 முதல் 3 மணி நேரத்தில் மீட்புப் பணிகள் முடிவடையும் என்று நம்புகிறேன்”எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி சுமார் 18 மணி நேரத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தௌசா மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரஞ்சிதா சர்மா கூறுகையில், “தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் காவல்துறையினர் உள்ளிட்ட எங்கள் துறைகளின் முயற்சியால் சிறுமியை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார். மேலும் இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையின உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், "600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு, 28 அடி உயரத்தில் சிறுமி சிக்கியிருந்தார். இருப்பினும் சிறுமியை வெற்றிகரமாக மீட்டுள்ளோம். இந்த மீட்புப்பணியில் 30 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் மற்றும் 10 மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டனர்” எனத் தெரிவித்தார்.