புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்படும் என தகவல் பரவியது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தி வராது எனவும், வழக்கம் போல தமிழ், ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கையே பின்பற்றப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்தி கட்டாயமாக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து கூறியுள்ள ராஜ் தாக்ரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி, "‘மகாராஷ்டிர மக்களின் தாய் மொழி மராத்தி. எங்கள் மொழியை படிக்கவும், அதற்கு முன்னுரிமை வழங்கவும் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதுபோல எந்தமொழியை தேர்வு செய்து படிப்பது என்பது மக்களின் உரிமை. அதனை அரசு திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’’ என மத்திய அரசை எச்சரித்துள்ளது.