கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அதே நேரம் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான குழந்தை ஒன்று வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்துகொண்டு பணியாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நிஃபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள - தமிழக எல்லையில் தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரைக் கண்காணிக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து வருவோரைக் கண்டறிந்து அவர்கள் குறித்த விபரங்களை தனியாக சேகரித்து வருகின்றனர்.