மகாராஸ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நவநிர்மாண் சேனா கட்சி, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று (09-10-23) முல்லுண்டு, தானே ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார், ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நவநிர்மாண் சேனா போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்கள் அந்த சுங்கச்சாவடிகள் வழியாக வந்த சிறிய ரக வாகங்களை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல வைத்தனர். இது தொடர்பாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சாலைகளில் வாகனங்கள் செல்லக் கட்டணம் வசூலிப்பது என்பது மிகப்பெரிய ஊழல். ஒவ்வொரு ஆண்டும் சில நிறுவனங்கள் மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் பெறுவது ஏன்?. ஏற்கனவே சாலை வரி கொடுத்துவிட்டோம். அப்படி இருக்கும் போது சாலைகளில் வாகனங்கள் செல்ல மீண்டும் ஏன் கட்டணம் கொடுக்க வேண்டும். அப்படி வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் எங்கு செல்கிறது?.
கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால், இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகாராஸ்டிர மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆனாலும், யாரும் வாக்குறுதி அளித்தது போல் மகாராஸ்டிராவை சுங்கச்சாவடி இல்லாத மாநிலமாக மாற்றவில்லை. சுங்கசாவடிகள் மூலம் பல அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள்.
சாலைகளில் வாகனங்கள் செல்ல கட்டணம் வசூலித்த போதிலும் சாலைகளில் எந்தவித வசதியும் இல்லாமல் மோசமாக தான் இருக்கிறது. எனவே, இந்த பிரச்சனை குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசுவேன். அந்த சந்திப்பிற்கு பிறகு என்ன முடிவு கிடைக்கிறது என்று பார்க்கலாம்?. அதன் பிறகு, மாநிலம் முழுவதும் எங்களது கட்சித் தொண்டர்கள் சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு செல்லும் சிறிய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவார்கள். எங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் சுங்கச்சாவடிகளை தீ வைத்து எரிப்போம்” என்று பேசினார்.