புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் அண்ணா சாலை, நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் உள்ள துணிக்கடை, பாத்திர கடைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர் உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் பெரிய கடை மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையங்களில் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேலாக திருட்டப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக இரு காவல் நிலைய போலீசாரும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரங்களில் பை மாட்டிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அந்தந்த கடைகளுக்கு அருகே செல்வது தெரியவந்தது. அதையடுத்து அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் பொள்ளாச்சி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஜஸ்டின் சுந்தர் (38) என்பதும், இவர் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இதே போல் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் தற்போது கன்னியாகுமரியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இவரை போலீசார் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அண்ணாசாலையில் கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை ஒதியஞ்சாலை காவல் நிலைய ரோந்து போலீசார் பிடித்து சோதனை செய்ததனர். அவர் பையில் சுத்தி, கொறடா மற்றும் சில சாவிகள் இருப்பதைக் கண்டு அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சி.சி.டி.வி காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஜஸ்டின் சுந்தர் என்பது தெரியவந்தது. அதனால் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரை இரு காவல் நிலைய போலீசாரும் ஒரிரு நாட்களில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சுந்தரை தமிழக போலீசாரும் தேடி வரும் நிலையில், அவர்களும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முயல்வதாகவும் புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர்.