Skip to main content

மணிப்பூருக்கு இரயில் சேவை நிறுத்தம்! 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Rail service to Manipur stopped!

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். 

 

நேற்று மாலை அம்மாநில ஆளுநர் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில், வடகிழக்கு இரயில்வே ‘நிலைமை சீராகும் வரை மணிப்பூருக்குள் எந்த ரயில்களும் இயக்கப்படாது. ரயில் இயக்கத்தை நிறுத்த மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்