ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களில் வெளியான ஆதாரங்கள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நேற்று இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது, "மத்திய அரசு பாதுகாப்புத்துறை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டு என மத்திய அரசு கூறியிருக்கிறது. அப்படியென்றால் ஊடகங்களில் வெளியான ஆவணங்கள் உண்மை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. அந்த ஆவணங்கள் உண்மையென ஒப்புக்கொண்ட நிலையில் அதனை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அந்த ஆவணங்களில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே அதனை திருடியவர்கள் மற்றும் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் 30,000 கோடி ஊழலுக்கு காரணமான பிரதமர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
மேலும் ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனதை போல நாட்டில் வேலைவாய்ப்பு காணாமல் போய்விட்டது எனவும், ரஃபேல் விவகாரத்தில் அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளியே வரும் எனவும் அவர் கூறினார்.