மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை(23.7.2024) நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமர் பதவிக்குக் கனவு காண முடியும்; மற்றவர்களுக்கு உரிமை இல்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரதமராக வேண்டும் என்று நினைத்தால் கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். பிரச்சனை ஏற்படுமோ என்று பயம் பாஜக அமைச்சர்கள் தொடங்கி அத்தனை பேருக்கும் இருக்கிறது. நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அச்சத்துடனே உள்ளனர்.
மகாபாரதத்தில் சக்கர வியூகம் நடந்தது போல் தற்போது தாமரை வியூகம் நடக்கிறது. பாஜகவின் சக்கர வியூகம் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்குமா என்பது கேள்விக்குறியே. பாஜக அரசின் சக்கர வியூகத்தைக் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநில அரசுகள் உடைத்தெறிந்து வருகின்றன. பிரதமர் மட்டுமே அரசின் முக்கிய அமைப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சக்கர வியூகத்தைத் துரோணர், அஸ்வத்தாமன் கட்டுப்படுத்தியது போன்று மோடி, அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர்.
ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நாட்டில் வரி தீவிரவாதம் நிலவுகிறது. நாட்டின் வரி தீவிரவாதத்தால் மக்களும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பால் வேலை வாய்ப்பு இல்லா நிலைத் தொடர்கிறது; தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு ஒன்றுமில்லை. நுழைவுத் தேர்வு நெறிமுறை குறித்து பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. கல்விக்கு குறைந்த நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்னிவீர் திட்டத்தில் ஓய்வுதியம் தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? புதிதாகக் கொண்டுவரப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள்தான் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன்டர்ன்ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றதுதான். கொரானா காலத்தில் கைதட்டுவதும், செல்போனில் டார்ச் அடிப்பதும் தான் இளைஞர்களுக்கு வழங்கும் வேலையா?
நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன; ஆனால் இது குறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா? நாடாளுமன்ற வளாகத்திற்குள் விவசாயிகளை அனுமதிக்காதது ஏன்? குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை ஏன் இன்னும் அளிக்கவில்லை? நடுத்தர மக்களின் முதுகில் மத்திய அரசு குத்திவிட்டது” என்றார்.
தொடர்ந்தும், அவர் அம்பானி, அதானியை ஏ1,ஏ2 என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி ரயில்வே, விமான போக்குவரத்துத்துறைகளின் ஒப்பந்தங்கள் 2 பெரிய பணக்காரர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனால் ஆளும் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அம்பானி அதானி பெயரைச் சொல்லக்கூடாது என்று கூறியதால் ராகுல் காந்தி இருவரையும் ஏ1, ஏ2 குறிப்பிட்டார்.