மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (03/07/2022) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராகுல் நர்வேகர் மற்றும் சிவசேனா கட்சி சார்பில் ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
பா.ஜ.க., சிவசேனா கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 160- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் நர்வேகருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகராகத் தேர்வான ராகுல் சர்வேகரை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அவரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது, ஜெய் பவானி, ஜெய் சிவாஜி, ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என்று பா.ஜ.க. கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளதாலும், நாளை (04/07/2022) சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாலும், இன்று (03/07/2022) சபாநாயகர் தேர்தல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.