காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவோடு மீண்டும் முதல்வரானார். மேலும் அவர், இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த திடீர் அரசியல் திருப்பத்தை அடுத்து ராகுல் காந்தி பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (29-01-24) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெவ்வேறு மதங்கள், சாதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவை சிந்தாந்த ரீதியாக நாட்டில் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றன.
மொழி, மதம், சாதி என்ற பெயரில் மக்களை வேறுபடுத்தி, அவர்களுக்கு இடையே மோதலைத் தூண்டிவிடும் பணியை அவர்கள் செய்து வருகின்றனர். இந்த சூழலைத்தான் நாடு முழுவதும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் உருவாக்கி உள்ளன. ஆனால், நாங்களோ மக்களை ஒன்றுபடுத்த உழைக்கிறோம். வெறுப்பு நிறைந்த சந்தையில் அன்பு எனும் கடையைத் திறந்துள்ளோம்” என்று கூறினார்.