ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், “இந்த தேசம் மக்களால் ஆனது, நிலத்தால் அல்ல. ஜம்மு காஷ்மீரை துண்டு துண்டாகக் கிழித்திருப்பதன் மூலமும் மக்கள் பிரதிநிதிகளை கைது செய்திருப்பதன் மூலமும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியிருப்பதன் மூலமும் தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கும் இந்த செயல் கண்டிப்பாக தேசத்தின் பாதுகாப்பில் தவறான விளைவுகளை உண்டாக்கும்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.