இந்தியாவில் வரும் ஜுலை மாதத்தில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டியும், 2024 நடாளுமன்ற தேர்தலை முன்னிட்டும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணிகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையை வெளியீட்டு விழாவில், இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் (பாகம் 1) வெளியீட்டு விழா, வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
திமுக பொதுசெயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர். பாலு முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உங்களில் ஒருவன் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, புத்தக வெளியிட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, வரவேற்புரை ஆற்றவுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்புரை ஆற்றவுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.