இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி உதவி வருகின்றன. மேலும் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன.
இந்தநிலையில் கரோனா சம்பந்தமாக வெளிநாடுகள் அளித்துவரும் உதவி குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், "இந்தியா வெளிநாட்டிலிருந்து என்னென்னவற்றை பெற்றது? அவையெல்லாம் எங்கே? அவற்றால் யார் பயனடைகிறார்கள்? அவை எவ்வாறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது? ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை?" எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ள ராகுல் காந்தி, 'எதாவது பதில் இருக்கிறதா இந்திய அரசே?' என்றும் கேட்டுள்ளார்.
ராகுல் காந்தி, இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கரோனாவிற்கு முழு ஊரடங்கே தீர்வு என சமீபத்தில் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.