ரஃபேல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கான ஆதாரங்களை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டிருந்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.26,570.80 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மேலும் ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன’ என பதிவிட்டிருந்தார். இது தொடர்பான ஆவணங்களையும் தனது பதிவில் இணைந்திருந்த நிர்மலா சீதாராமன், தற்பொழுது ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்பாரா? அல்லது பதவி விலகுவாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி. '1 லட்சம் கோடி கொடுத்ததாக நாடாளுமன்றத்தில் கூறிவிட்டு தற்பொழுது 26,570 கோடி என்கிறார். நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார்' என கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில், 'மோடி அரசு ஏற்கனவே HAL சார்பில் வழங்கப்பட்ட பொருட்களுக்கு உரிய தொகை வழங்கவில்லை,ஆனால் எந்த தயாரிப்பிலும் இதுவரை ஈடுபடாத டசால்ட் நிறுவனத்திற்கு பெரிய தொகையை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி, அணில் அம்பானி நிறுவனத்தை காப்பாற்ற HAL நிறுவனத்தை பயன்படுத்திக்கொள்கிறாரோ' என பதிவிடப்பட்டுள்ளது.