மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலியாக உள்ள 22 லட்சம் அரசு பணியிடங்கள் வரும் மார்ச் 2020 க்குள் நிரப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "2019-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசில் நிரப்பப்படாமல் இருக்கும் 22 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பபடும். ஆட்சிக்கு வந்த ஒன்றைரை ஆண்டுக்குள், அதாவது 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என உறுதியளிக்கறேன். மேலும் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி தொடர்பான பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஒவ்வொரு காலியிடமும் நிரப்பப்படும்" என கூறியுள்ளார்.