பண தகராறு காரணமாக 40 வயதான ஸ்ரீமதி என்ற பெண்ணை ஒரு தம்பதியினர் கொடூரமாக கொன்று உடலை துண்டுகளாக்கி நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்துள்ளனர்.
கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த வாரம் நடந்த இந்த கொலையில் 4 நாட்களில் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர் அம்மாநில போலீசார். 40 வயதான ஸ்ரீமதி, அத்தாவர் பகுதியில் மின்சாதன விற்பனையகம் நடத்தி வந்தார். இவர் நந்திகுட்டே பகுதியில் ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வரும் சாம்சன் என்பவருக்கு 1 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
40,000 ரூபாயை கொடுத்த சாம்சன் மீதம் 60,000 ரூபாயை கொடுக்கவில்லை. இதனை கேட்க சாம்சன் வீட்டிற்கு ஸ்ரீமதி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சாம்சன் தனது மனைவியுடன் சேர்ந்து ஸ்ரீமதியை கொன்று உடலை 3 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
பிறகு உடல் பகுதிகளை கோணிப்பைகளில் போட்டு நகரின் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர். 30 பேர் அடங்கிய தனிப்படை இந்த கொலையை விசாரித்து 4 நாட்களில் கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தம்பதிகளை கைது செய்து விசாரித்த போது ஸ்ரீமதி அணிந்திருந்த 8 தங்க மோதிரங்கள் மற்றும் நெக்லெஸ் ஆகியவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
கொடுத்த கடனை திரும்ப கேட்டதற்காக ஒரு பெண்ணை கணவன், மாமணிவி இருவரும் இணைந்து கொடூரமாக கொன்ற இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.