மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா பஞ்ச்குலா பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பதவியில் இருக்கும் இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர், முதலில் சிறைக்குச் சென்ற ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்னும் சிறையில் இருக்கிறார். ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். மாயாவதி ஊழல்வாதி ஆனால் நவீன் பட்நாயக் அல்ல. லாலு யாதவ் ஊழல்வாதி. யாராவது பழங்குடியினர் அல்லது பட்டியலினத்தவர் என்றால், அவர் தானாகவே கட்டமைக்கப்படுகிறார்.
பிரதமரின் வீட்டிற்கு, எனது பாட்டி, அதன் பின்னர் தந்தை பிரதமராகவும், பின்னர் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்தபோது, நான் செல்வது வழக்கம். எனவே எனக்கு உள்ளே இருந்து அமைப்பு தெரியும். இந்த அமைப்பு தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஒரு முக்கிய வழியில் ஒவ்வொரு மட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது என்று நான் கூறுகிறேன். நான் ஜூன் 19, 1970 இல் பிறந்ததிலிருந்து அமைப்பின் உள்ளே இருக்கிறேன். அதனால் அதன் அமைப்பை நீங்கள் என்னிடமிருந்து மறைக்க முடியாது.
பட்டியலினத்தவர்கள், ஓபிசிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உட்பட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அதிகார அமைப்பில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களில் மூத்த அறிவிப்பாளர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், ஊடக உரிமையாளர்கள் அல்லது மேலாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை” எனத் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.