கடந்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலிருந்து பசு மாடுகளை கடத்தி வந்ததாகக் கூறி முகமது அமீன் என்பவர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதில், “பசுவதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது. பல நோய்களுக்குப் பசுவின் சிறுநீர் அருமருந்தாக உள்ளது” என்று தெரிவித்திருக்கின்றனர்.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்றும் பசுக் காவலர்கள் என்ற பெயரில்., மாட்டு இறைச்சி விற்பவர்கள், சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நீதிமன்றத்தின் இந்தக் கருத்து வியப்பாக இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்து எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.