இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆறு கட்டமாக 486 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இறுதி கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம், பாலிகஞ்ச் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பிரதமர் முடிவெடுப்பதில்லை, ஆனால் அது கடவுளால் (பரமாத்மா) எடுக்கப்படுகிறது என்று கூறுகிறார். அவர் பயாலஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, பரமாத்மாவின் தூதுவர் என்று கூறுகிறார். அவர் ஏன் இந்தக் கதையைக் கொண்டு வந்தார் தெரியுமா?
ஏனென்றால், தேர்தல் முடிந்ததும் அதானியைப் பற்றி அமலாக்கத்துறை அவரிடம் கேட்கும். அப்போது பிரதமர் மோடி, அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவார். மேலும் அவர், இதைப் பரமாத்மா என்னிடம் சொன்னார் என்று சொல்வார். மோடி, நீண்ட தேர்தல் பிரச்சாரத்தை நிகழ்த்துவதையும், நாட்டை பிளவுபடுத்துவதையும் நிறுத்துங்கள். நாட்டு இளைஞர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள்? என்று முதலில் பீகார் மக்களிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்.
முன்னதாக, தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்குப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.