வங்கி அமைப்பு முறையைச் சீரமைக்க முயன்றதால் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை இழந்தார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் “ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா அளித்த பேட்டி ஒன்றில், "திவால் சட்டத்தை நீர்த்து போக செய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டதால், உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் திட்டத்திற்கு உர்ஜித் படேல் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ராகுல் காந்தி, "வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்காக உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. ஏன் தெரியுமா, வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களை பின்தொடர்ந்து பெற பிரதமர் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.