"கரோனா வைரஸ் ஒரு பெரிய பிரச்சனை" என்பதை திரும்ப திரும்ப கூறுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா தற்போது சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஒருவர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கரோனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, "கரோனா வைரஸ் நமது மக்களுக்கும், நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது என் உணர்வு. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது" என தெரிவித்தார்.
தனது இந்த ட்வீட்டை தற்போது மீண்டும் பகிர்ந்துள்ள அவர், "இதை நான் தொடர்ந்து கூறுவேன். கரோனா வைரஸ் ஒரு பெரிய பிரச்சனை. சிக்கலைப் புறக்கணிப்பது ஒரு தீர்வு அல்ல. தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிக்கப்படும். இந்த விஷயத்தில் அரசு தடுமாறுகிறது" என தெரிவித்துள்ளார்.