நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பட்டுள்ளதாக பிவிஆர் லிமிடெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டதால், அதனை சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, திரையரங்குகளின் உரிமையாளர்களும் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். இந்த நிலையில், கரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு, அதன் வியாபாரம் பழைய நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது.
இச்சூழலில், பிவிஆர் லிமிடெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (27/03/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள திரைகளின் பிராண்டிங்குடன் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என பெயரிடப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலி, செயல் இயக்குநராக சஞ்சய் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் எஸ்விபி கம்பெனியின் செயலாளர் முகேஷ்குமார் (SVP Company Secretary & Compliance Officer).
பிவிஆர் லிமிடெட் நிறுவனம் தற்போது 73 நகரங்களில் உள்ள 181 இடங்களில் 871 திரையரங்குகளை நடத்தி வருகிறது. ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனம் 72 நகரங்களில் 160 இடங்களில் 675 திரைகளை இயக்குகிறது. ஒருங்கிணைந்த நிறுவனம் 109 நகரங்களில் உள்ள 341 இடங்களில் 1,546 திரைகளுடன் மிகப்பெரிய திரைப்பட கண்காட்சி நிறுவனமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
INOX Leisure Limited and PVR Limited Announce Merger
Merger to bring together two of India’s best cinema brands to deliver an unparalleled consumer experience with a network of more than 1500 screens #PressRelease @_PVRCinemas pic.twitter.com/H0LCm6T7MJ— INOX Leisure Ltd. (@INOXMovies) March 27, 2022