சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.