பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தள கட்சியின் ஆட்சை நடைபெற்றது. இந்த ஆட்சிக் காலத்தில் சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) கட்சித் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், பிரகாஷ் சிங் பாதல் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சீக்கிய மதத்துக்கு எதிரான தவறுகளுக்காக, முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்து வந்த சுக்பீர் சிங் பாதலுக்கு, சீக்கியர்களின் அதிகார பீடமான அகால் தக்த் தலைவர் கியானி ரக்பீர் சிங் நேற்று (02-12-24) மத ரீதியான தண்டனையை வழங்கினார். அதில், அக்கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், சுக்பீரின் ராஜினாமா கடிதத்தை ஏற்று, புதிய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்த குழு அமைக்க வேண்டும் என்று எஸ்ஏடி செயற்குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’ என்ற பட்டத்தை திரும்ப பெறப்படுவதாக கியானி ரக்பீர் சிங் தெரிவித்தார்.
இந்த தண்டனையை ஏற்ற முன்னாள் துணை முதல்வரான சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் தலைவர் ராஜினாமா செய்து இன்று காலை சக்கர நாற்காலியில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் வந்தார். அவரது கழுத்தில் ஒரு பலகை மாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவர் பொற்கோயிலில் உள்ள பாத்திரங்கள், காலணிகள், குளியலறைகள், கழிவறைகள் போன்றவற்றை சுத்தம் செய்து தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மறைந்த பிரகாஷ் சிங் பாதல் ஆட்சியில், சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.