விவசாய மசோதாக்களை எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்மாநிலத்தின் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து மாநிலத்தின் பல பகுதிகளில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறப்பு ரயில் சேவை மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, 28 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வலுபெற்றுவரும் சூழலில், அங்கு அடுத்துவரும் நாட்களிலும் ரயில் சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.