பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்மப்பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வந்து தீவிர சோதனை ஆய்வு நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் உள்ள மர்மப்பொருள் வெடித்தது தொடர்பான ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் மர்மப்பொருள் அல்லது வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
பொற்கோவில் அருகே அடுத்தடுத்து மர்மப்பொருட்கள் வெடித்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த மர்மப்பொருள் வெடிப்பு தொடர்பாக 5 பேரை கைது செய்து உள்ளதாக அம்மாநில போலீஸ் டிஜிபியின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவும் இதே போன்ற பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். கடந்த 8 ஆம் தேதியும் இதே போன்ற மர்மப்பொருள் ஒன்று வெடித்தது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில போலீஸ் டிஜிபி கௌரவ் யாதவ் இந்த சம்பவம் குறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில், "கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் அசாத் வீர் சிங் மற்றும் அம்ரீக் சிங் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகள் ஆவர். சாகிப் சிங், ஹர்ஜித் சிங் மற்றும் தர்மேந்திர சிங் ஆகியோர் வெடிமருந்துகளை விநியோகம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.100 கிலோகிராம் எடை உடைய குறைந்த தீவிரம் கொண்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.