புதுச்சேரி மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேலும் பண்டிகை காலங்களை மக்கள் கொண்டாட அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக யாருக்கு தடுப்பூசி போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 'நிவர்' புயல், 'புரெவி' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணங்கள் வழங்க நிதி ஆலோசனை செய்யப்பட்டது.
சனிபெயர்ச்சி விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. தற்போது திருநள்ளார் கோவிலில் விதி முறைகளை பின்பற்றி பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல நடைபெறும். அதற்கும் எந்த வித தடையும் கிடையாது. புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை. அதேசமயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கொண்டாடலாம்" எனத் தெரிவித்தார்.