புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் பணிநேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “பெண்களுக்கு வெள்ளிக்கிழமையில் வீடு சுத்தப்படுத்துதல், பூஜை செய்தல் உள்ளிட்ட பணிகள் இருக்கும். அதற்கு ஏதுவாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் 2 மணி நேரம் பணி குறைக்கப்படும். காலை 9 மணிக்குப் பதிலாக 11 மணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் கிடைத்துவிட்டதால் விரைவில் இது அமலுக்கு வரவுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பெண்களின் நலன் கருதி 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.