புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நேரில் வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் தடுப்பூசி திருவிழா வரும் ஜூன் 21- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்துவதிலிருந்த தயக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஜூலை 1- ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நாளை (21/06/2021) யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது.யோக கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம். மூன்றாவது அலை வர இருப்பதால் மக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.