கரோனா நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி அளிக்காதது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் நிதி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று (24/04/2020) கறுப்புக் கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன. அதன்படி இன்று (24/04/2020) காலை 10.00 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதி ஜென்மராக்கினி கோவில் அருகில் காங்கிரஸ், திமுக கூட்டணியினர் கறுப்புக்கொடியுடன் திரண்டனர்.
திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ தலைமையில் வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநிலத் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவைக் காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். அப்போது மத்திய அரசு கரோனா பேரிடர் நிதியைப் பாரபட்சமின்றி வழங்க வேண்டும், புதுச்சேரிக்கான நிதியை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி பெற வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைப் போலீசார் கைது செய்து தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.