புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (03/05/2020) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி மற்றும் மாஹே பிராந்தியங்களை ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காரைக்காலும், ஏனாமும் பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் திறக்கலாம். எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை. காலை 06.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை திறந்திருக்கலாம். கைகளில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும். முகக் கவசம் அணிந்து வரவேண்டும். வேலை செய்பவர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் விதி மீறல்கள் இருந்தால் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் காலை 06.00 மணிமுதல் திறந்திருக்கலாம். ஆனால் பார்சல் மட்டுமே கொடுக்கவேண்டும். மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. அரசு ஊழியர்கள் 33 சதவீதம் பணிக்கு வரவேண்டும். தனியார் நிறுவனத்திலும் 35 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம். அங்கும் கிருமி நாசினி, முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். வெளிமாநிலங்களுக்குச் சென்ற புதுச்சேரி தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என 900 பேர்கள் அனுமதி கேட்டு உள்ளார்கள். தொழிலாளர் மற்றும் மாணவர்களை அழைத்து வருவதற்கு தேவையான செலவை அரசே ஏற்கும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதி இல்லை. பக்கத்துக்கு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இருந்து யாரும் புதுச்சேரிக்கு வர அனுமதி கிடையாது. வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதி இல்லை.
மே 17- ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு தொடரும், புதுச்சேரி மக்கள் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 7 கோடிக்கு மேல் வந்துள்ளது. இவை மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவுகின்றது. இருப்பினும் புதுச்சேரி அரசுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. ஊரடங்கால் ஒன்றரை மாதங்களாக மக்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாகப் புதுச்சேரிக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பணியாளர்களுக்கு திங்கட்கிழமை (இன்று) முதல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.