Skip to main content

"முற்றிலும் வெட்கக்கேடானது.. பல சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன" - பிரியங்கா காந்தி கைதுக்கு  ப. சிதம்பரம் கண்டனம்!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

p chidambram

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொது அமைதிக்கு ஊரு விளைவித்ததாக இன்று (05.10.2021) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பிரியங்கா காந்தி கைதில் பல சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதோடர்பாக அவர், "பிரியங்கா காந்தியை கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமானது, முற்றிலும் வெட்கக்கேடானது. அதிகாலை 4:30 மணியளவில், சூரிய உதயத்திற்கு முன், ஒரு ஆண் போலீஸால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதுவரை பிரியங்கா காந்தி நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லப்படவில்லை. பல சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் & ஒழுங்கிற்கு வேறு அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது. அங்கு சட்டம் என்றால் ஆதித்யநாத்தின் சட்டம். ஒழுங்கு என்றால் ஆதித்யநாத்தின் உத்தரவு என்ற நிலை உள்ளது. பிரியங்கா காந்தியின் கைது அவரின் அரசியல் அமைப்பு உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்