நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில், வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், தேர்தல் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதில், கேரளா முன்னாள் நிதி அமைச்சர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்.பியாக இருக்கும் ஆன்றோ ஆன்றனியும், பா.ஜ.க சார்பில் அனில் ஆன்றனியும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நேற்று முன் தினம் (01-04-24) மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ரூ.9.26 லட்சம் மதிப்பிலான 20,000 புத்தகங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாகவும், சொந்தமாக வீடு மற்றும் நிலங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 - 2021 ஆகிய காலகட்டத்தில் கேரள மாநில நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த போதும், தனக்கென சொத்து சேர்க்காமல், புத்தகங்களை வாங்கி அறிவை மட்டும் சொத்துக்களாக சேர்த்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தாமஸ் ஐசக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.