சிக்கிம் பகுதியில் இந்தியச் சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
3,000 கிலோமீட்டருக்கு மேலான எல்லைப்பகுதியை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒருசில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த எல்லை பிரச்சனை காரணமாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவ்வப்போது சிறுசிறு சண்டைகளும் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017- ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அப்பகுதியில் 73 நாட்கள் பதட்டமான சூழ்நிலை நிலவியது. பின்னர் அது முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் இரு நாடுகளின் அரசும் தங்களது ராணுவ வீரர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவது என்றும், தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது என்றும் தீர்மானித்தன.
இதன் பின்னர் வீரர்களுக்கு மத்தியிலான சண்டை குறைந்திருந்த நிலையில், மீண்டும் இருநாட்டு வீரர்களுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா கணவாய் பகுதியில் பணியிலிருந்த இருநாடுகளையும் சேர்ந்த சுமார் 150 ராணுவ வீரர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் ஆரம்பித்தனர். இதில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அதன்பிறகு அங்குள்ள அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு தரப்பு வீரர்களும் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகு அங்கு அமைதி திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.