கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பெண் மருத்துவரின் தந்தை, "எனது மகள் உயிரிழந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் இந்த என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. இதற்காக காவல்துறை, தெலங்கானா அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்.” என்று தெரிவித்தார்.