உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உத்தரப்பிரேதச காங்கிரஸ் கட்சிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிய மாயாவதியும், அகிலேஷும், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதால் ஒரு பயனும் இல்லை என்றும் அறிவித்தார்கள். இதற்கு பழிதீர்க்கும் வகையில் உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார்.
அப்போது நிலமையின் தீவிரத்தை புரியாமல் காங்கிரஸ் முடிவை கேலி செய்தார்கள். அதையும்தாண்டி, காங்கிரஸின் முடிவு பாஜகவுக்கே சாதகமாகும் என்றார்கள். ஆனால், திடீரென்று பிரியங்கா காந்தியை அரசியிலில் களம் இறக்கிய காங்கிரஸ் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இது உ.பி.அரசியலுக்கு மாத்திரம் அல்லாமல் அகில இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பிரியங்காவின் திடீர் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி, அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, #priyankaGandhi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. மேலும் இந்தியளவில் #PriyankaInPolitics, #PriyankaEntersPolitics, #PriyankaVadra என்று பல ஹேஸ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது. ராகுலுக்கு பதில் பிரியங்கா அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று பல அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.