
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது. எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் மற்றும் டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி கடந்த 1ஆம் தேதி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இதனையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மத்திய அரசு சார்பில் உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் ஹிட் அண்ட் ரன் சட்டப்பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் வரையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக அஜய்குமார் பல்லா உறுதியளித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்காமல், ‘துக்ளக் சட்டங்கள்” இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஓட்டுநர்கள் நமது பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரங்கள். அவர்கள் மிகக் குறைந்த அளவு பணத்திலும், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வேலை பார்த்து கடினமாக வாழ்க்கை முறையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சட்டமும், அமைப்பும் மனிதாபிமானமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமை. சட்டத்தின் நோக்கம் சாமானியரின் வாழ்க்கையை எளிதாகவும், பாதுகாப்பாகவும், நியாயமாகவும் ஆக்குவது தான். கோடிக்கணக்கான மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி, அவர்களை மிரட்டி பணம் பறித்து சிறைக்கு தள்ளுவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது. எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் துக்ளக் சட்டங்களை ஒருதலைபட்சமாக இயற்றும் பணியை நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.