கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் பிரியங்கா காந்தி இன்று வேப்ப மனுத் தாக்கல் செய்வதற்காக கேரள மாநிலம் வயநாடு வந்துள்ளார். அவருடன் அவருடைய சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வந்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு கேரள காங்கிரஸ் சார்பில் பரப்புரை வாகனத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 'ரோட் ஷோ'- வை தொடர்ந்து பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அங்கே இருபது நிமிடத்திற்கு மேலாக பிரியங்கா காந்தி உரையாற்ற இருக்கிறார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸினுடைய தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் மட்டுமல்லாது காங்கிரசினுடைய முதலமைச்சர்கள் பலரும் பங்கேற்க இருக்கின்றனர்.கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலுங்கானாவின் முதல்வர், இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தற்போது வயநாட்டில் முகாமிட்டுள்ளனர்.