இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம், ஜூன் 14ஆம் தேதி வெளியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை எனக் கூறி, இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 14ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில், இந்தத் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “முதலில் நீட் தேர்வுத்தாள் கசிந்த நிலையில், தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.