இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே இரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னரும், காசா மீது இஸ்ரேல் இன்னும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள், 60க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் உட்பட 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒட்டு மொத்த தேசமே அழிந்து வருகிறது. இவர்களும் நம்மைப் போலவே கனவுகளும், நம்பிக்கையும் கொண்டவர்கள் தான். அவர்கள் இரக்கமின்றி நம் கண் முன்னே மரணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். எங்கே நம் மனிதாபிமானம்?. சர்வதேச அரங்கில் இந்தியா எப்போதும் நியாயத்தின் பக்கத்தின் மட்டுமே துணை நிற்கிறது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். இந்தியா ஆரம்பத்தில் இருந்தே பாலஸ்தீன மக்களுக்கு தன் ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால், இப்போது அனைத்து மக்களும் படுகொலை செய்யப்படும் போது நாம் ஒதுங்கி இருப்பதா?. சர்வதேச சமூகத்தில் உறுப்பினராக உள்ள இந்தியாவின் கடமை எதுவோ அதற்கு எதிராக நிற்பது. விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.