கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
தேர்தல் அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் பிரியங்கா காந்தி, இன்று (23-10-24) வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனி தாக்கல் செய்வதற்கு முன்பு வாகண பேரணியில் அவர் கலந்து கொண்டார். அந்த பேரணியில், சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நான் 17 வயதில் இருக்கும்போது எனது தந்தைக்காக (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) முதல் முறையாக பிரச்சாரம் செய்தேன். அதன் பின்னர், எனது தாய், சகோதரர் மற்றும் எனது சக காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். 35 ஆண்டுகளாக நான் வெவ்வேறு தேர்தல்களில் பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன். எனக்காக உங்களது ஆதரவை நான் நாடுவது மிகவும் வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக கருதுவேன்.
இங்கு நடந்த அழிவை நான் என் கண்களால் பார்த்தேன். குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன், குழந்தைகளை இழந்த தாய்களைச் சந்தித்தேன். வாழ்நாள் முழுவதையும் இழந்த மக்களை நான் சந்தித்தேன். ஆனால், அவர்கள் அந்த நிலையிலும் தைரியத்தோடு நின்றிருந்தனர். அனைவருக்கும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவி செய்தனர். அப்படிபட்ட வயநாடு தொகுதியில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறினார்.