தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர் ராவ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பாரத ராஷ்டிர சமிதி என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சியையும், பா.ஜ.க.வையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தெலங்கானாவில் மஜ்லிஸ் (எம்ஐஎம்) கட்சியும், சந்திரசேகர ராவ்வின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் நட்பாக உள்ளன. மத்தியில் பா.ஜ.க.வும், பிஆர்எஸ் கட்சியும் நட்பு பாராட்டுகின்றன. இந்த 3 கட்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ்க்கு வாக்களிப்பதாகவே அர்த்தம். எம்ஐஎம் வாக்களிப்பது பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களிப்பது போன்றதே. இவர்கள் மூவரும், ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் காட்சியைப் போல கூட்டமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.