விவசாய மசோதாக்கள் மூலம் பாஜக ஆட்சி தங்களது கோடீஸ்வர பணக்கார நண்பர்களை வேளாண் துறைக்குள் நுழைப்பதில்தான் ஆர்வமாக உள்ளது எனப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. விவசாயத்தை மொத்தமாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் தாரைவார்க்கும் சட்டதிருத்தமாக இது இருக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு சந்தை முறையை அழிவை நோக்கி இட்டுச்செல்வது, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கிடைக்கவிடாமல் செய்வது, விவசாய நிலங்கள் மீதும், விவசாயிகள் மீதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்கள் விவசாயிகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாக இருக்கும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "இது விவசாயிகளுக்குக் கடினமான காலகட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்து அரசு விவசாயக் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும், ஆனால் எதிர்மறையாக நடக்கிறது. மாறாக பாஜக ஆட்சி தங்களது கோடீஸ்வர பணக்கார நண்பர்களை வேளாண்துறைக்குள் நுழைப்பதில்தான் ஆர்வமாக உள்ளது. விவசாயிகள் குரல்களைக் கேட்கக்கூட விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.