இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான சூழ்நிலையில் நேற்று (29/11/2021) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று (30/11/2021) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குச் சென்ற மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவை, பிரதமர் நரேந்திர மோடி கையைப் பிடித்து தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அத்துடன் அவரை இருக்கையில் அமர வைத்தார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.