நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட் உரைக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இது புதிய நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் திறன் இந்த பட்ஜெட்டில் இருந்து புதிய அளவுகோல் ஆகும். இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். இந்த பட்ஜெட் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும்.
இந்தப் பட்ஜெட்டில், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு முதல் மாத சம்பளத்தை அரசு வழங்கும். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.
இன்று, பாதுகாப்பு ஏற்றுமதி மிக உயர்ந்த அளவில் உள்ளது. பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெறச் செய்ய இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரி குறைப்பு மற்றும் டிடிஎஸ் விதிகள் எளிமைப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் நெடுஞ்சாலைகள், நீர்நிலைகள் மற்றும் மின் திட்டங்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறோம்.
நாம் இணைந்து இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம். நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) துறை நடுத்தர வர்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் உரிமை நடுத்தர வர்க்கத்தினரிடம் உள்ளது. இந்தத் துறை ஏழைகளுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வசதியை அதிகரிக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி சூழலை கொண்டு செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் ஸ்டார்ட்அப் மற்றும் விண்வெளி பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்” எனப் பேசினார்.